×

54 ஆண்டுகளுக்கு பிறகு குன்றத்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்: ஏற்பாடுகள் தீவிரம்

பல்லாவரம், நவ.18: குன்றத்தூர் முருகன் கோயிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று சூரசம்ஹாரம் விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். குன்றத்தூரில் மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான முருகன் கோயில் அமைந்துள்ளது. தெய்வப்புலவர் சேக்கிழார் பெருமானால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு, சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இப்படி புகழ்பெற்ற குன்றத்தூர் முருகன் கோயிலில் கடந்த 54 ஆண்டு காலமாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப்படாமல் இருந்தது. இதனால், கோயிலில் மீண்டும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்பேரில், இந்த ஆண்டு சூரசம்ஹாரம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி, முருகப்பெருமான் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கந்தழீஸ்வரர் கோயிலில் முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை 4 மணிக்கு நடந்தது. இதை தொடர்ந்து குன்றத்தூர் முருகன் கோயில் மலை அடிவாரத்தில் இன்று சூரசம்ஹாரம் விழா நடக்கிறது. இந்த கோயிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சூரசம்ஹார விழாவை காண சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வரக்கூடும் என்பதால், கோயில் நிர்வாகம் சார்பில் விழா நடைபெறும் இடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடந்தது. மேலும், பக்தர்களுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சூரசம்ஹாரம் விழாவையொட்டி, பக்தர்களின் நலனுக்காக ஏராளமான மருத்துவ முகாம்கள், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட உயிர் காக்கும் வாகனங்கள் மற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் கோயிலுக்கு பக்தர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில், சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்தும் குன்றத்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரை கண்ணன், செயல் அலுவலர் கன்யா தெரிவித்தனர். கந்தசஷ்டியை முன்னிட்டு, சூரசம்ஹாரம் விழா இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதனையடுத்து, முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, தங்க வேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்கிறார். தொடர்ந்து நாளை முருகப்பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. சூரசம்ஹாரம் விழா ஏற்பாடுகள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

The post 54 ஆண்டுகளுக்கு பிறகு குன்றத்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்: ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Surasamharam ,Kunradthur Murugan Temple ,Pallavaram ,Surasamharam festival ,Kunradathur Murugan Temple ,
× RELATED குன்றத்தூர் முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை: திரளான பெண்கள் வழிபாடு